Sunday 22 July, 2007

சுஜாதாவிற்கு செருப்படி தேவையா?

அன்பர்களே,

சமீபமாக, அசுரன் எழுதிய ஒரு கட்டுரையில் ஆணாதிக்கத்தையும்,நிறவெறியையும்,சமூக சீர்கேட்டையும் பரப்பும் சுஜாதாவைச் செருப்பலோ, விளக்குமாறாலோ அடித்து பாராட்ட வேண்டும் என எழுதியிருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை.. என்ன உடன்பாடில்லை என்று இறுதியில் சொல்கிறேன்.
(அசுரனின் முழு கட்டுரையையும் படிக்க http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_4202.html ).
இந்த கட்டுரைக்கு பலரும் பின்னூட்டமிட்டு சுஜாதா தரப்பு நியாயங்களை சுஜாதாவையும் விஞ்சும் அளவுக்கு கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக கம்யூனிச பூச்சாண்டி என்றும் மற்றும் சில அனானிகளும் வைக்கிற வாதஙளை மட்டும் வைத்துக்கொண்டு அலசுவோம்.

வெறுமனே கதை எழுதுகிற எழுத்தாளனிடம் ஏன் சமூக அக்கறை இருக்க வேண்டும்?

எப்போதுமே கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கானது.. அது இசையோ, எழுத்தோ, ஓவியமோ, திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால் எதுவாக இருந்தாலும் சரி, எந்த ஒரு படைப்புமே படைத்துவிட்டு அடுத்தவனுக்கு தெரியாமல் அவனுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள படைக்கப்படுவதில்லை. அது பொதுப் பார்வைக்கு வருகிற போது பயனாளியும் பாதிக்கப்படுகிறார்,அவர் வளர்ச்சிக்காகவோ அல்லது சீரழிவிற்காகவோ ஏதோ ஒரு வகையில். எனவே ஒரு படைப்பு என்பது சமூகத்தை ஒரு அங்குல அளவாவது முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் என்றால் அதை நாம் வரவேற்கலாம்.அல்லது அப்படைப்பு குறைந்தபட்சம் சமூகத்தைப் பின்னுக்கு இழுக்காமல் இருந்தாலாவது போதும்..அந்த வகையில் பார்க்கிறபோது யாருக்கெல்லாம் சமூகத்தின் மீதும் சக மனிதன் மீதும் அக்கறை இருக்கிறதோ அவர்களையெல்லாம் படைப்பாளியும் எதிர் கொண்டேயாக வேண்டும்...

சுஜாதாவும் நல்ல கதை எழுதவில்லையா? ஏன் அவர் திரைப்படத்தில் எழுதியதை மட்டும் வைத்துக் கொண்டு அவரைத் தூற்ற வேண்டும்?

நல்லது. நான் சுஜாதாவின் எல்லா கதைகளையும் படித்ததில்லை.. உடனே அவர் எழுதிய எல்லாவற்றையும் படித்து விட்டு தான் விவாதத்திற்கே வர வேண்டும் என்று அவசியமில்லை.எனக்கு தெரிந்தவற்றில் ஒரு உதாரணம் மட்டும் கூறுகிறேன்.அந்த கதையின் பெயர் நினைவில்லை. ஒரு பகுதியை மட்டும் சொல்கிறேன். அக்கதையில் ஒருவருக்கு ஒரு தீவிரமான உடல் பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.சில ஆங்கில வைத்தியரிடம் போய் ஒன்றும் சரியாகாமல் ஒரு நாட்டு வைத்தியரிடம் போவார். இந்த வைத்தியரின் இடததை விவரிக்கிற போது தெய்வீக மணம் கமழும் இடமாகவும், சுற்றியும் ராமகிருஸ்ண பரமஹ்ம்சர், விவேகானந்தர் போன்றோரின் படங்கள் மாட்டியிருப்பதாகவும் எழுதியிருப்பார். அதாவது ஒரு சாதாரண வாசகனுக்கு மரியாதைக்குரிய ஒரு கதாபாத்திரம் போன்று இருக்கும். அந்த வைத்தியர் இவரிடம் ஒரு லேகியத்தை கொடுக்கிறார். அதை எப்படி சாப்பிட வேண்டும் என சொல்கிறபோது வைத்தியர் சொல்வதாக சொல்கிறார். " இந்த லேகியத்தில் ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுக்கு அதாவது ஒரு 13 வயசு பொண்ணுக்கு இருக்குமில்ல.. அந்த சைசுக்கு எடுத்து காலையும் மாலையும் சாப்பிடணும்" என்று எழுதி இருப்பார்..இந்த கதாபாத்திரத்திற்கும் அவர் பேசும் வசனத்திற்கும் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா? ஒரு 40,50 வயது ஆளுக்கு 13 வயசு பெண்ணைப் பார்தால் என்ன தோன்ற வேண்டும்? சுஜாதாவிற்கு என்ன தோன்றுகிறது? இது தான் சுஜாதா. இந்த கதை எழுதிய காலம் சுமார் 20,25 ஆண்டுகளுக்கு முன்பு. ஆக, அவரின் சொந்த மன ஆழத்தில் உள்ள வக்கிரம் அவரின் எழுத்திலும் வெளிப்படுகிறது.
ஆனால் இங்கே நம் பூச்சாண்டி ஏதோ "அரிசி" கதையில் அவர் சமூக அவலத்தை சொல்லவில்லையா என்கிறார். எனக்கென்னவோ இந்த கேள்விக்கும்,"சுஜாதா இத்தனை நாள் சோறுதானே தின்னுட்டு இருந்தாரு..ஏதோ ஒரு நாள் வேறு "எதை"யோ தின்னதுக்கு போய் திட்டுறதா?"என்ற கேள்விக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.(முகம் சுளிக்கிற வாசகர்கள் மன்னிக்க, சுஜாதா தரப்பு நியாயத்துக்கு இந்த கேள்வி தகும்)

பாய்ஸ் படத்தை எடுத்துகொண்டு எல்லோரும் விமர்சிக்கிறார்கள். ஏன் அது மாதிரி எல்லாம் நடப்பதே இல்லையா நம் நாட்டில்?

பாய்ஸ் படத்தில் சுஜாதாவுடைய, சங்கருடைய ஒட்டு மொத்த வக்கிரமும் வெளிப்படுகிறது. அப்படியெல்லாம் நடக்கிறதே இல்லையா என்றால், அங்கங்கே நடக்கிறது தான்.. ஆனால் அதை எல்லோருக்கும் பொதுவாக்கவும், நியாயப்படுத்தவும் மேலும் ஊக்குவிக்கவும் மட்டுமே இந்த மாதிரி படங்களும், வசனமும் பயன்படுகின்றன..பாய்ஸ் படத்தில் கவனித்துப் பார்த்தால், இளைஞர்கள் அப்படி இருப்பதில் தவறில்லை.. அந்த வயதில் அப்படிதான் இருப்பார்கள் என்று தான் வசனத்திலும், காட்சியமைப்பிலும் நிறுவியிருப்பார்கள்.கவுண்டமணி பாணியில் "இந்த வயசில் இதெல்லாம் சகஜம்ப்பா". இதைத் தான் "இழிவான சிந்தனை வயப்பட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்படும் தேவையும் இல்லாமல் இவரது எழுத்து நடை செய்து விடுகிறது" என்று அசுரன் கட்டுரையில் சொல்கிறார்.அதிலும் "சிவாஜி"யில் கறுப்பு நிறத்தை கிண்டல் செய்யும் காட்சியை பார்க்கிற போது, உங்கள் தோளில் ஒருவன் கை போட்டுக்கொண்டே "அப்புறம்..வேசி மகனே, எப்படிரா இருக்கே?" என்று கேட்டால் எப்படி இருக்கும்.அதே மாதிரி கோபம் தான், நம்மை இழிவுபடுத்தி நம்மிடமே விற்பனை செய்கிற சுஜாதா, சங்கர் வகையறாக்களின் மேல் ஏற்படுகிறது.

சுஜாதா கதை எனக்கு பிடிக்கும். உஙளுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள். ஏன் நான்(அல்லது நாங்கள்) மதிக்கிற எழுத்தாளரை திட்ட வேண்டும்?

ஒரு தனி எழுத்தாளர் மேல் பூச்சாண்டி போன்றோருக்கு இருக்கும் கரிசனத்தை, அக்கறையை விட அவரின் எழுத்தில் மயங்கிகிடக்கிற, அதனால் பாதிக்கப்படுகிற சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை தான் அசுரன், சுகுணா திவாகர் போன்றோரை சுஜாதாவை அம்பலப் படுத்த தூண்டுகிறது. அல்லது குறைந்த பட்சம் என் மனைவியை, சகோதரியை, என் சமூக மதிப்பை சுஜாதாக்களிடமிருந்தும் அவர் வாசகர்களிடம் ஏற்படுத்தி வைத்திருக்கிற வக்கிரங்களிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டிய தேவையாவது எனக்கு இருக்கிறது..

இன்னும் நிறைய பேசலாம்..ஆனால் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

நான் ஆரம்பத்தில் சொன்னேன். அசுரன் எழுதியதில் உடன்பாடில்லை என்று.. அதாவது அசுரன் சொன்னதெல்லாம் குறைவு. இப்போது தலைப்பில் சற்று பிழை இருக்கிறது. இப்படி வைத்து கொள்ளலாம்.

"சுஜாதாவிற்கு செருப்படி போதுமா?"

மாத்தி வாசி...