Sunday 22 July, 2007

சுஜாதாவிற்கு செருப்படி தேவையா?

அன்பர்களே,

சமீபமாக, அசுரன் எழுதிய ஒரு கட்டுரையில் ஆணாதிக்கத்தையும்,நிறவெறியையும்,சமூக சீர்கேட்டையும் பரப்பும் சுஜாதாவைச் செருப்பலோ, விளக்குமாறாலோ அடித்து பாராட்ட வேண்டும் என எழுதியிருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை.. என்ன உடன்பாடில்லை என்று இறுதியில் சொல்கிறேன்.
(அசுரனின் முழு கட்டுரையையும் படிக்க http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_4202.html ).
இந்த கட்டுரைக்கு பலரும் பின்னூட்டமிட்டு சுஜாதா தரப்பு நியாயங்களை சுஜாதாவையும் விஞ்சும் அளவுக்கு கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக கம்யூனிச பூச்சாண்டி என்றும் மற்றும் சில அனானிகளும் வைக்கிற வாதஙளை மட்டும் வைத்துக்கொண்டு அலசுவோம்.

வெறுமனே கதை எழுதுகிற எழுத்தாளனிடம் ஏன் சமூக அக்கறை இருக்க வேண்டும்?

எப்போதுமே கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கானது.. அது இசையோ, எழுத்தோ, ஓவியமோ, திரைப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால் எதுவாக இருந்தாலும் சரி, எந்த ஒரு படைப்புமே படைத்துவிட்டு அடுத்தவனுக்கு தெரியாமல் அவனுக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ள படைக்கப்படுவதில்லை. அது பொதுப் பார்வைக்கு வருகிற போது பயனாளியும் பாதிக்கப்படுகிறார்,அவர் வளர்ச்சிக்காகவோ அல்லது சீரழிவிற்காகவோ ஏதோ ஒரு வகையில். எனவே ஒரு படைப்பு என்பது சமூகத்தை ஒரு அங்குல அளவாவது முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் என்றால் அதை நாம் வரவேற்கலாம்.அல்லது அப்படைப்பு குறைந்தபட்சம் சமூகத்தைப் பின்னுக்கு இழுக்காமல் இருந்தாலாவது போதும்..அந்த வகையில் பார்க்கிறபோது யாருக்கெல்லாம் சமூகத்தின் மீதும் சக மனிதன் மீதும் அக்கறை இருக்கிறதோ அவர்களையெல்லாம் படைப்பாளியும் எதிர் கொண்டேயாக வேண்டும்...

சுஜாதாவும் நல்ல கதை எழுதவில்லையா? ஏன் அவர் திரைப்படத்தில் எழுதியதை மட்டும் வைத்துக் கொண்டு அவரைத் தூற்ற வேண்டும்?

நல்லது. நான் சுஜாதாவின் எல்லா கதைகளையும் படித்ததில்லை.. உடனே அவர் எழுதிய எல்லாவற்றையும் படித்து விட்டு தான் விவாதத்திற்கே வர வேண்டும் என்று அவசியமில்லை.எனக்கு தெரிந்தவற்றில் ஒரு உதாரணம் மட்டும் கூறுகிறேன்.அந்த கதையின் பெயர் நினைவில்லை. ஒரு பகுதியை மட்டும் சொல்கிறேன். அக்கதையில் ஒருவருக்கு ஒரு தீவிரமான உடல் பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.சில ஆங்கில வைத்தியரிடம் போய் ஒன்றும் சரியாகாமல் ஒரு நாட்டு வைத்தியரிடம் போவார். இந்த வைத்தியரின் இடததை விவரிக்கிற போது தெய்வீக மணம் கமழும் இடமாகவும், சுற்றியும் ராமகிருஸ்ண பரமஹ்ம்சர், விவேகானந்தர் போன்றோரின் படங்கள் மாட்டியிருப்பதாகவும் எழுதியிருப்பார். அதாவது ஒரு சாதாரண வாசகனுக்கு மரியாதைக்குரிய ஒரு கதாபாத்திரம் போன்று இருக்கும். அந்த வைத்தியர் இவரிடம் ஒரு லேகியத்தை கொடுக்கிறார். அதை எப்படி சாப்பிட வேண்டும் என சொல்கிறபோது வைத்தியர் சொல்வதாக சொல்கிறார். " இந்த லேகியத்தில் ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுக்கு அதாவது ஒரு 13 வயசு பொண்ணுக்கு இருக்குமில்ல.. அந்த சைசுக்கு எடுத்து காலையும் மாலையும் சாப்பிடணும்" என்று எழுதி இருப்பார்..இந்த கதாபாத்திரத்திற்கும் அவர் பேசும் வசனத்திற்கும் ஏதாவது பொருத்தம் இருக்கிறதா? ஒரு 40,50 வயது ஆளுக்கு 13 வயசு பெண்ணைப் பார்தால் என்ன தோன்ற வேண்டும்? சுஜாதாவிற்கு என்ன தோன்றுகிறது? இது தான் சுஜாதா. இந்த கதை எழுதிய காலம் சுமார் 20,25 ஆண்டுகளுக்கு முன்பு. ஆக, அவரின் சொந்த மன ஆழத்தில் உள்ள வக்கிரம் அவரின் எழுத்திலும் வெளிப்படுகிறது.
ஆனால் இங்கே நம் பூச்சாண்டி ஏதோ "அரிசி" கதையில் அவர் சமூக அவலத்தை சொல்லவில்லையா என்கிறார். எனக்கென்னவோ இந்த கேள்விக்கும்,"சுஜாதா இத்தனை நாள் சோறுதானே தின்னுட்டு இருந்தாரு..ஏதோ ஒரு நாள் வேறு "எதை"யோ தின்னதுக்கு போய் திட்டுறதா?"என்ற கேள்விக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.(முகம் சுளிக்கிற வாசகர்கள் மன்னிக்க, சுஜாதா தரப்பு நியாயத்துக்கு இந்த கேள்வி தகும்)

பாய்ஸ் படத்தை எடுத்துகொண்டு எல்லோரும் விமர்சிக்கிறார்கள். ஏன் அது மாதிரி எல்லாம் நடப்பதே இல்லையா நம் நாட்டில்?

பாய்ஸ் படத்தில் சுஜாதாவுடைய, சங்கருடைய ஒட்டு மொத்த வக்கிரமும் வெளிப்படுகிறது. அப்படியெல்லாம் நடக்கிறதே இல்லையா என்றால், அங்கங்கே நடக்கிறது தான்.. ஆனால் அதை எல்லோருக்கும் பொதுவாக்கவும், நியாயப்படுத்தவும் மேலும் ஊக்குவிக்கவும் மட்டுமே இந்த மாதிரி படங்களும், வசனமும் பயன்படுகின்றன..பாய்ஸ் படத்தில் கவனித்துப் பார்த்தால், இளைஞர்கள் அப்படி இருப்பதில் தவறில்லை.. அந்த வயதில் அப்படிதான் இருப்பார்கள் என்று தான் வசனத்திலும், காட்சியமைப்பிலும் நிறுவியிருப்பார்கள்.கவுண்டமணி பாணியில் "இந்த வயசில் இதெல்லாம் சகஜம்ப்பா". இதைத் தான் "இழிவான சிந்தனை வயப்பட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்படும் தேவையும் இல்லாமல் இவரது எழுத்து நடை செய்து விடுகிறது" என்று அசுரன் கட்டுரையில் சொல்கிறார்.அதிலும் "சிவாஜி"யில் கறுப்பு நிறத்தை கிண்டல் செய்யும் காட்சியை பார்க்கிற போது, உங்கள் தோளில் ஒருவன் கை போட்டுக்கொண்டே "அப்புறம்..வேசி மகனே, எப்படிரா இருக்கே?" என்று கேட்டால் எப்படி இருக்கும்.அதே மாதிரி கோபம் தான், நம்மை இழிவுபடுத்தி நம்மிடமே விற்பனை செய்கிற சுஜாதா, சங்கர் வகையறாக்களின் மேல் ஏற்படுகிறது.

சுஜாதா கதை எனக்கு பிடிக்கும். உஙளுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள். ஏன் நான்(அல்லது நாங்கள்) மதிக்கிற எழுத்தாளரை திட்ட வேண்டும்?

ஒரு தனி எழுத்தாளர் மேல் பூச்சாண்டி போன்றோருக்கு இருக்கும் கரிசனத்தை, அக்கறையை விட அவரின் எழுத்தில் மயங்கிகிடக்கிற, அதனால் பாதிக்கப்படுகிற சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை தான் அசுரன், சுகுணா திவாகர் போன்றோரை சுஜாதாவை அம்பலப் படுத்த தூண்டுகிறது. அல்லது குறைந்த பட்சம் என் மனைவியை, சகோதரியை, என் சமூக மதிப்பை சுஜாதாக்களிடமிருந்தும் அவர் வாசகர்களிடம் ஏற்படுத்தி வைத்திருக்கிற வக்கிரங்களிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டிய தேவையாவது எனக்கு இருக்கிறது..

இன்னும் நிறைய பேசலாம்..ஆனால் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

நான் ஆரம்பத்தில் சொன்னேன். அசுரன் எழுதியதில் உடன்பாடில்லை என்று.. அதாவது அசுரன் சொன்னதெல்லாம் குறைவு. இப்போது தலைப்பில் சற்று பிழை இருக்கிறது. இப்படி வைத்து கொள்ளலாம்.

"சுஜாதாவிற்கு செருப்படி போதுமா?"

மாத்தி வாசி...

Tuesday 17 July, 2007

ராமசாமியும், அவன் பொண்டாட்டியும், கந்தசாமியும்...

ஒரு குட்டி கதை சொல்லட்டா?

நம்ம ராமசாமி பொண்டாட்டிய புதுசா வேஷம் கட்டிக்கினு வந்த கந்தசாமி வூட்டுக்குள்ளாற பூந்து தூக்கினு பூட்டானாம்.. ராமசாமி ரிடர்ன் வந்து விஷயத்தை கண்டுக்கினு படா டென்ஷன் ஆகிக்கினானாம்..அப்பால கந்தசாமியோட பேக்கிரவுண்டு இன்னா, ஏதுன்னு விசாரிக்கசொல்லோ மெய்யாலுமே மெர்சலாகி போச்சு தாம் ராமசாமிக்கு.. சரி இன்னா பண்றதுன்னு வூட்டாண்ட இருந்த ஆளுங்கள எல்லாம் வலிச்சுகினு போனாலும் பத்தாதுன்னு நெனைச்சுகினு போற வழியில நம்ம வீராசாமியயும் அவம் ஆளுங்களயும் கூட்டம் சேர்த்துகினு கிளம்புனானாம். அப்படியே கெளம்பி போயி கந்தசாமியோட பேட்டைக்குள்ளாறயே ஜபர்தஸ்தா பூந்து சும்மா அடி பின்னி எடுத்துப்புட்டு, வீராசமிய வுட்டு பேட்டையில அல்லாத்தயும் கொளுத்தி போட்டுட்டு அவம்பொண்டாட்டிய மட்டும் வூட்டுக்கு இட்டாந்தானாம்.. அதுக்கு பொறவுதான் ஒரு டவுட்டானானாம்.. இன்னாடாது.. நம்ம பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த பொறவு அவ போக்கே செரியில்லயே..இத்தினி நா கந்தசாமி வூட்டுல இருக்கசொல்லோ எதுவும் மேட்டர், கீட்டர் ஆயிடுச்சான்னு..அத கேட்ட ராமசாமி பொண்டாட்டிக்கு மெய்யாலுமே மனசுக்கு கஸ்டமா பூடுச்சாம். இன்னாடாது நமக்கு கட்டுனவனும் சரியில்ல, இவனுக்கு தூக்கிட்டு போனவனே தேவலாம்போலன்னு சொல்லிகினு தாம் மேலயே நெருப்ப பத்த வச்சுகினாளாம். அவ்ளோதான்! கத முடிஞ்சு போச்சு...

இன்னாம்மே முயிக்கிறே..
இந்த கத உனுக்கு தெரியாதா..? இன்னாமே சொல்ற?
இத தானம்மே ஆயிரம், ரெண்டாயிரம் வருசமா நம்ம நாட்டுல சொல்லிகினுகீராங்க..
பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த ராமசாமியத்தான் அங்கங்க செல வச்சு கும்பிட்டுகினுகீறாங்களாமே..
இந்த கத தாம்மே நம்ம நாட்டுக்கே பேர் பெத்த ஏதோ "ராமாயணம்"னுவாங்களாமே?
----------------------------------------------------------
உங்கள் புரிதலுக்காக இங்குள்ள சென்னைத்தமிழ் வார்த்தைகள்..

வூடு - வீடு
பூந்து - புகுந்து
பேக்கிரவுண்டு - பின்னணி
மெர்சல் - பயம்
வலிச்சுகினு - சேர்த்துக் கொண்டு
பேட்டை - இடம்
ஜபர்தஸ்தாக - தைரியமாக, வலுக்கட்டாயமாக
டவுட்டு - சந்தேகம்
செல - சிலை
-----------------------------------------------------------
-படைப்புக்கு மூலக் கருத்து பேரா. பெரியார்தாசன் சொற்பொழிவில் இருந்து உருவானது..
பேரா.பெரியார்தாசனுடைய முழு சொற்பொழிவையும் கேட்க கீழே சொடுக்கவும்..



இது மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தஞ்சை தமிழ் மக்கள் இசை விழாவில் (பிப். 2003)பேசியது..

Thursday 12 July, 2007

சாமீ.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி...

சமீப காலமாக, சென்னையில் தெற்கு பக்கமாக அப்படியே தரமணி தாண்டி மத்திய கைலாஷ்... துரைப்பாக்கம்...எல்லாம் போய் கேளம்பாக்கம் போகும் பழைய மகாபலிபுரம் போகிற வழியெங்கும் பார்த்திருப்பீங்க..சாலைப் பணிகள் எல்லாம் படு வேகமாக நடந்து வருவதை..இந்த சாலையெங்கும் நிறைய மென்பொருள் (அட.. அதுதாங்க.. சாஃப்ட்வேர்) நிறுவனங்கள் வருகின்றனவாம். அதனால் அரசு தொலைநோக்கு பார்வையோடு அதற்கான உள்கட்டுமான வசதி (அடச்சே.. இன்ஃப்ராஸ்ட்ரச்சருங்க..)எல்லாம் இப்பவே பண்ணிகிட்டுருக்காங்களாம்.. இந்த நிறுவனங்கள் ஆரம்பிச்ச பின்னாடி நம்ம நாட்டுக்கு ஏகப்பட்ட அந்நிய செலாவணி வருமாம்... இந்த சாலைக்கு பேரு "தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலை"(அதாவது ஐ டி காரிடாராம்).

நம்ம முதல்வர் அடிக்கடி அறிக்கை விடுவாரு.."ஐ டி காரிடார்" வேலை எல்லாம் துரித கதியில் நடந்து வருகிறது.. 2007க்குள் முடித்து விடுவோம்.. 2008க்குள் முடித்து விடுவோம்னு.. நம்ம முன்னாள் ஐ டி தயாநிதி கூட இடைஇடையில அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாரு.. இந்த பணிகளை எல்லாம் சீக்கிரம் முடிக்க சொல்லியிருக்கேன்னு..

நினைக்கவே ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க.. இப்போது தான் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் அல்லது இன்னமும் ஆரம்பிக்காத நிறுவனங்களுக்காக, அந்நிறுவனங்களில் பணிபுரியப் போகிற நம் சகோதர,சகோதரிகளுக்காக இப்போதே நம் அரசு திட்டமிட்டு பணியாற்றுவது சந்தோஷம் தானே... அதுவும் இந்த சாலையெங்கும் அப்படியே அங்கங்கே நீரூற்றாம்.. அப்புறம் இரண்டு பக்கமும் மரங்களாம்.. அங்கங்கே சிறபங்கள் எல்லாம் வேற வைக்கப்போறாங்களாம்..(மத்திய கைலாஷ் பக்கமா போய் பாருங்க.. சாலைக்கு இரண்டு பக்கமும் சுவரெல்லாம் ஓவியங்கள் வேற..) நம்ம ஆளுங்க ஏ சி காருல போனாலும் போற பாதையெல்லாம் கண்ணுக்கும் குளிர்ச்சி.. மனசுக்கும் மகிழ்ச்சியா இருக்கணும்ல.. ஆக கிட்டதட்ட நம்ம சென்னைய கூட ஒரு ஃபாரின் ரேஞ்சுக்கு கொண்டு வரப் போறாங்களாம்.. கேக்கவே எனக்கு புல்லரிக்குது.. நம்ம அரசாங்கம் இப்பல்லாம் ரொம்பவே தொலைநோக்கு பார்வையோட தான் திட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க.. உண்மையிலேயே பெருமையாக இருக்குதுல்ல...?

கொஞ்சம் பொறுங்க...
அப்படியே இதே சென்னையில அந்த பக்கமா.. அதாவது வட சென்னை பக்கமா போய் பார்ப்போமா?...

அங்க இந்த அம்பத்தூர்,பாடின்னெல்லாம் சில பகுதிகள் இருக்குங்க.. அங்கயும் இந்த மாதிரி நிறைய நிறுவனங்கள் இருக்குது.. அங்க தென்சென்னையில இப்ப நம்ம பார்த்த பகுதிகள்ல வரப் போற நிறுவனங்கள விட அதிகமான நிறுவனங்களும், தொழிற்சாலையெல்லாம் ஏற்கனவே பத்து, பதினஞ்சு வருசமா இருக்குதுங்க.. என்ன, அங்கெல்லாம் இப்ப பார்த்த மென்பொருள் மாதிரி தொழில் எல்லாம் ரொம்ப இல்லீங்க.. ஆனா அங்கேயும் பத்தாயிரம,லட்சக் கணக்கான ஆளுங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க... பஸ்ஸூலயும், வண்டியிலும், சைக்கிள்லயுமா தினம் வந்து போய் கிட்டு தான் இருக்காங்க முன்னாடியே.... ஆனா அங்கே இருக்கிற சாலையெல்லாம் பாத்தா என்னமோ அடிக்கு இரண்டு பள்ளம்னு நம்ம அரசாங்கமே கணக்கு போட்டு பண்ணின மாதிரி ஒரே குண்டும் குழியுமா தான் இருக்கு. அதிலயும் மழை பேஞ்ச நேரத்துல எல்லாம் போனா, ஏதோ இப்பதான் நாத்து நட்டு வச்சிருக்கிற வயக்காட்டு பக்கமா வந்துட்டோமோன்னு தான் தோணுது... கல்யாணம் ஆகாத பிள்ளைக்கு கூட பிரசவ வலி எடுத்துடும் போல.. அந்த லட்சணத்துல தான் எல்லா சாலையுமே இருக்கு..ரொம்ப வருசமாவே இப்படித்தான் இருக்குதாம்.. இங்கல்லாம் அங்கங்கே நீரூற்றும் வேணாம்..சைடுல மரம் கூட வேணாம்.. முழுசா ஒரு ரோடு போடறத பத்திக்கூட பேச யாருமில்லையே..

நமக்கு இந்த அந்நிய செலாவணி, உள்ளூர் செலாவணிங்கிற மாதிரி களவாணித்தனம் எல்லாம் தெரியாதுங்க.. அம்மா கட்சி கூட்டத்துலல்லாம் நம்ம எம்ஜியார் கேசட்டு போடுவாங்க.. கேட்டிருக்கேன்.. "மக்களுக்காக, மக்களால் தேர்ந்து எடுக்கப்படுவது தான் அரசு.. அந்த அரசு நடத்துகிற ஆட்சி தான் மக்களாட்சி"ன்னுவாரு..இந்த மக்கள், மக்கள்னு சொல்றாங்களே.. இவங்க எந்த மக்கள சொல்றாங்க.. எல்லா மக்களும் நம்ம அரசாங்கத்துக்கு ஒண்ணு தானா?.. அதே மாதிரி எல்லா நிறுவனங்களும் நம்ம அரசாங்கத்துக்கு ஒண்ணு தானா?..

விவரமான ஆளுங்க யாராவது சொல்லுங்க சாமி..

Friday 6 July, 2007

"கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடை"

அன்பர்களே,
இம்முறை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நடைமுறைப்படுத்திய படு கேவலமான சட்ட,திட்டங்களில் ஒன்று தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது.இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.
சில மாதங்களுக்கு முன், மதனோ, சுஜாதாவோ எழுதியதாக நினைவு..
"கேள்வி: சமீபத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்ட விசயம்?பதில்: நம் கலைஞர் அவர்கள் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரே ஒரு சட்டம் போட்டு ஒரே நாளில் அனைத்து தமிழ் படங்களையும் தமிழில் பெயர் வைக்கும் படி மாற்றியது..இது ஒரு அளப்பரிய சாதனை.."
அன்பர்களே, யோசித்துப் பாருங்கள்..
தமிழ் நாட்டில், தமிழர்கள் பார்க்கும தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசிடமிருந்து வரிச் சலுகை உண்டு... யோசிக்கவே கேவலமாக இல்லை?..அநேகமாக, இது போன்ற ஒரு கேவலமான நிலைமை எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது...
உண்மையில், தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது என்பதை நாம் ஆதரிக்கிறோம்.அது அவசியமும் கூட.. அதே நேரத்தில், அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே நம் ஊரில் திரைத் துறையினருக்கு ஏகப்பட்ட சலுகைகள்..( போன முறை இதே திமுக ஆட்சியில் நடிகர் சங்க கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்தது.. ஜெ ஜெ ஆட்சியில் படம் வெளி வந்த முதல் 15 நாட்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தது..இன்னும் இது போல் பல...)ஒரு பழ மொழி உண்டு.. "கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடை"ன்னு..ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் வேளையில் பொதுவான ஒரு அறிக்கை போர் நடக்கும்..தாங்கள் தான் திரைத்துறையினருக்கு அதிக சலுகை கொடுத்தோம் என்று மாற்றி மாற்றி பட்டியல் இடுவது நடக்கும்..நாமும் பார்த்துகொண்டு ஏதோ நமக்கு சம்பந்தமில்லாத விசயம் போல சும்மா இருப்போம்..இப்போது தமிழ் பெயருள்ள படங்களுக்கு வரிச் சலுகை என அறிவித்த முதல் 4,5 மாதங்களில் 40 கோடி ரூபாய் அளவில் தமிழக அரசுக்கு வரி இழப்பு என்று படித்தேன்.உண்மையில் இது யாருடைய வரிப் பணம்?
மேலும் ஒரு நண்பர் சொன்ன தகவல் இது..சில வருடங்களுக்கு முன்பெல்லாம் வரிச் சலுகை என்றால் நேரடியாக மக்களை போய் சேரும். அதாவது வரி சலுகை தேவையான படங்களுக்கு கேளிக்கை வரி இல்லையென்றால் திரையரங்கு கட்டணம் பாதி விலையில் இருக்கும். நாம் பார்த்திருக்கிறோம்.. இப்போதுள்ள வரி சலுகை எல்லாம் வெறுமனே திரைத் தயாரிப்பாளருக்கு மட்டுமே செல்கிறது..
அதிலும் திமுக ஆட்சியின் மற்றுமொரு சமீபத்திய அயோக்கியத்தனம் சிவாஜி படத்துக்கு வரி விலக்கு என்றது.."சிவாஜி என்பது தமிழ் பெயரா? ஏன் வரி விலக்கு?" என்றால், "இல்லை.. அது பெயர்ச் சொல்.. அதனால் வரி விலக்கு"என்று விளக்கம் சொல்கிறது கலைஞர் அரசு. அப்படியென்றால் சீனாவில் சின்-சாய்-ஸூய் அப்படின்னு ஒரு அறிஞர் இருந்தாராம்..அவர் பேருல நாளைக்கு யாராவது இங்கே படம் எடுத்தா வரி சலுகை கொடுப்பாரா கலைஞர்? ங்கொய்யா.. அதுவும் பெயர்ச் சொல் தானய்யா அப்படின்னு கேட்க மாட்டான்?ரஜினிக்காக சிறப்பு சலுகை..அதுவும் சிவாஜி படத்தை கலைஞர் டிவிக்கு உரிமம் கொடுப்பது என்ற கொடுக்கல் வாங்கலில் தமிழக அரசுக்கு வரி இழப்பு..
முன்பு படங்களுக்கு தமிழ் பெயர் தான் வைக்க வேண்டும் என்று சிலர் போராட்டம் நடத்திய போது "அய்யோ தீவிரவாதம்...அராஜகம்...கருத்து சுதந்திரம் போச்சு"என்றெல்லாம் அத்தனை பேரும் கூப்பாடு போட்டார்கள்..சில பேர் "நாங்கள்லாம் கதைக்கு ஏற்ற மாதிரி தான் பெயர் வைப்போம்.. இதையெல்லாம் அரசு கட்டாயப்படுத்துவதா" என்று ஒப்பாரி வேறு. ஆனால் இப்போதெல்லாம் எல்லா படங்களுமே தமிழ் பெயரோடு தான் வருகின்றன.. எப்படி?... ஒரு உதாரணம் சொல்கிறேன்.. ஆர்யா நடிக்கிற ஒரு படத்துக்கு பூஜை போடும்போது வைத்த பெயர் "ஆட்டோ"வாம்.. ஆனா இப்போது அதே படத்துக்கு பெயர் "ஓரம் போ"வாம்.. இப்படி பல கூத்து..எல்லாம் வரிச் சலுகை செய்கிற வேலை..ஆக இந்த மாதிரியெல்லாம் பெயர் மாற்றினவுடனே தமிழ் வானளாவ வளர்ந்து விடுமோ?.."பெயர் மட்டும் தமிழில் வை.. உள்ளே நீ எவ்வளவு மோசமாக படம் எடுத்தாலும் பரவாயில்லை"என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்..
இறுதியாக, படைப்..ப்ப்..பாளிகளின் கருத்து சுதந்திரமும் பறிக்கக் கூடாது.. தமிழில் பெயர் வைப்பதையும் அமலாக்க வேண்டும் என்பதை அரசு எப்படி நடைமுறைப்படுத்துவது?..ஒரு எளிமையான வழி உண்டு..எப்போதும் போல எந்த படத்துக்கும் சலுகை வேண்டாம்..அதே நேரத்தில் தமிழ் தவிர்த்து வேறு எந்த பெயர் இருந்தாலும் அதற்கென்று ஒரு சிறப்பு வரி அல்லது ஒரு முறைக் கட்டணம் (2 லட்சம், 3 லட்சம் என்ற அளவில் ஒரு குறைந்த பட்ச கட்டணமாக இருக்கலாம்)படத்தின் அனுமதிக்கு.. இப்படி உண்மையிலேயே எங்கள் படத்துக்கு இந்த பெயர் தான் பொருத்தம் என்கிறவர்கள் அப்படியே வைத்துக் கொள்ளலாம்..இந்த வகையில் தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்திய மாதிரியும் ஆச்சு.. கருத்து சுதந்திரத்தை காப்பாற்றிய மாதிரியும் ஆச்சு.. அரசுக்கு எந்த வரியிழப்பும் இல்லை..

என்ன நான் சொல்றது?...

Sunday 1 July, 2007

"சிவாஜி - த லூஸு" தமிழினத்தின் விடி வெள்ளி?...

அன்பர்களே,

உலகத்துல மூலை முடுக்குன்னு பாக்காம எல்லா பகுதில இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே நேரத்துல பைத்தியம் பிடிக்குமா? அந்த அதிசயம் நடந்துச்சு. போன ஜூன் 15ஆம் தேதிக்கு. இன்னும் சில பேருக்கு அது தெளியவேயில்லை. தமிழ்நாட்டிலும், மற்றும் உலகத்துல எங்கெங்கோ இருக்கிற தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே பிரச்சினை. ஒரே கேள்வி. சிவாஜி பார்த்தாச்சா? படம் எப்படி? - இப்படி தான் நம்ம டி.வி. பேப்பர், நெட் எல்லாம் பாத்தா யோசிக்க தோணுது.
ரஜினி ரஜினி மாதிரியெ இல்லையாம் ( குரங்க மனுசனா மாத்தி விட்ட மாதிரியோ? )அவ்வளவு அழகா இருக்காராம். இன்னாள் முதல்வர் குடும்பத்தோட பார்க்கிறாராம். அடுத்ததா முன்னாள் முதல்வரும் பார்க்கிறாராம். பத்தாததுக்கு ஆந்திரா முன்னாள் முதல்வர் வேற பாத்துட்டு அவங்க கட்சி காரவுக எல்லாம் கண்டிப்பா பாக்கணுமுன்னு கட்டளை போட்டுருக்காராம்.
நம்ம ஒயிட் ஹவுஸ் தாதா ஜார்ஜ் புஷ்ஷு கூட இராக்குல இருக்கிற பஞ்சாயத்தெல்லாம் சட்டு புட்டுனு முடிச்சுப்பிட்டு சிவாஜி பாககலாம்னு இருக்காராம்.
என்ன நடக்குது இங்க? ஒரு படத்துக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம். ரஜினி ரசிகன்னு சொல்ற ஆளுங்கள விடுங்க. நம்ம சராசரி ஆளுங்களுக்கே இந்த பில்டப்புகள பார்த்து ஒரு உறுத்தலும் இல்லையே?. அப்படின்னு பல கேள்விகள். உண்மையில இதன் பின்னணி என்னங்கிறத எல்லாம் ஒரு பொதுவான ஆளு கேக்கிற கேள்விகளில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இனி அது மாதிரியான கேள்விகளும் அதுக்கான பதில்களும் ( நான் புரிந்து கொண்ட வரைக்கும்...)

"இப்ப சிவாஜி படத்துக்கு பண்ற அத்தனை களேபரமும், ரஜினியா பண்றாரு? அவங்க ரசிகர்கள்னு சொல்லிகிட்டு தானே பண்றாங்க. இதுக்கு போய் எல்லோரும் ரஜினியை ஏன் திட்டுறாங்க. என்னங்க நியாயம் இது?"

உண்மைதான்.பொதுவா இப்பல்லாம் ரஜினி படத்துக்கெல்லாம் படம் தயாரிக்கிற ஆளுங்க விளம்பரம் பண்ண வேண்டியதில்லை. சும்மா ஒரு பிட்டு போட்டா போதும். எல்லாத்தையும் மீடியாவே பார்த்துக்குறாங்க. அதிலயும் இந்த ரசிகர்கள் ஒரு படம் வர்ரதுக்கு கட் அவுட் பாலாபிஷேகம் பண்றதும், காவடி தூக்கிறதும் பார்க்கிறப்போ கூடிய சீக்கிரமே நம்ம அப்துல் கலாம் சொல்ற மாதிரி இந்தியா வல்லரசாகிடுமோன்னு தான் தோணுது. ஆனா உங்கள் கேள்விப்படி ரசிகர்கள் செய்யுற சேட்டைகளுக்கும், அதிகப்பிரசிங்கித்தனதுக்கும் ரசிகன் மட்டுமே காரணம். ரஜினி ஒரு அப்பாவி. பாவம் அவருக்கு எதுவுமே தெரியாதுன்ற மாதிரி இருக்கிறது. இது உண்மையா?.
எங்கியோ இமயமலையில இந்தியால நூறு கோடி பேருக்கும், அத்தனை பத்திரிகை, டிவிக்கும் தெரியாம 2000 வருசமா ஒளிஞ்சிகிட்டு இருந்த பாபாவை கண்டு பிடிச்சி சொன்னவருக்கு இங்க நம்ம ஊருல நடக்கிற விசய்ம் தெரியாதா?அவருக்கு தெரியும். இப்படியெல்லாம் நடந்தா தான் அவர் படத்துக்கு விளம்பரம் இருக்கும்னு …கூட்டம் வரும்னு. அதுவுமில்லாம ஒவ்வொரு படத்துலயும் நம்மாளுக்கு "உன் வாழ்க்கை உன் கையில்"னு அட்வைஸ் பன்றவர்க்கு இப்ப ரசிகன் சொந்த வேலைய விட்டுட்டு இப்படி தன்னோட படத்துக்கு வெட்டியா காவடி தூக்குறது தப்புன்னு. எல்லாம் தெரிஞ்சும் சும்மா அமைதியா இருக்குறது எதுக்கு?
சரி ரசிகன் தானா வந்து ஏமாளியா இருக்கான். அதுக்கு ரஜினி என்ன பண்ணுவாருன்னு நீங்க கேக்கிறது புரியுது. ஒரு உதாரணத்துக்கு நிறைய போலி சாமியார் கதை படிதிருப்பீங்கல்ல. (சாமியார்னாலே போலி தானே, அதுல என்ன நல்ல சாமியார், போலி சாமியாருன்னு என்பது வேறு விசயம், அதை அப்புறம பார்த்துக்கலாம்). எந்த சாமியாராவது பக்தனிடம் அடிச்சு பிடுங்கியிருக்கிறார்களா? எல்லாமே பக்தனை பக்தி மயக்கத்தில் வச்சுக்கிட்டே நம்மாளு அடிக்கிறது தான். பிரேமானந்தாவையெல்லாம் இப்பவும் ஜெயில்ல வந்து பக்தர்கள் பாக்குறாங்களாம். நம்ம ஜெகத்துகுரு சங்கராச்சி கூட வெளில வந்து ஜெகஜோதியா கல்லா கட்டிட்டு தான் இருக்கார். இன்னமும் இவனுகள சில பேரு நம்பிகிட்டு தான் இருக்காங்க. இப்ப உங்களுக்கு பக்தன் மேல் வருகிற அதே கோபம் சாமியார் மேலும் வர வேண்டும். அது தான் நியாயம்.
இன்னும் சொல்லப் போனா ரஜினிக்கு தெரியாதா. இப்போ தமிழ் நாட்டில் எத்தனை பேர் படம் பார்ப்பார்கள் அதில் எத்தனை பேர் தியெட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று. அப்புறமும் இத்தனை கோடி போட்டு தியேட்டர் முதலாளி படப்பெட்டி வாங்கினால் அவன் நியாயமான தியேட்டர் கட்டணம் வைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியாதுன்னு. அப்ப யாருக்கு மொட்டை அடிக்கலாம். வேற யாரு.. நம்ம ரசிக மக ஜனங்களை தான்! ஒவ்வொரு டிக்கெட்டும் 500 ரூபாய் 1000 ரூபாய் என்று செய்திகள் வருகின்றன. (ஏறக்குறைய எல்லா பத்திரிக்கையிலும் செய்தி வருகிறது, சிவாஜி பட டிக்கெட் கட்டணத்தை பற்றி. ஆனா அரசு தரப்பில இது பத்தி ஒரு நடவடிக்கையும் இல்லையே! கலைஞருக்கும் ரஜினிக்கும் உள்ள உள்குத்து என்னன்னு விளங்குதா?) இப்படி மக்களை (அதுவும் சொந்த ரசிகனையே) கொள்ளை அடிக்கிற கூட்டணியின் காரணகர்த்தாவை, தலைவனை எப்படி அடிப்படையில் அப்பாவி என்றும் யோக்கியன் என்றும் சொல்ல முடியும்? எனக்கு புரியலையே சாமி..

"அதெல்லாம் சரி..ரஜினி அவர் சொந்த உழைப்பால் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார்.. அவருக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கு.. அவருக்கு நல்ல மார்க்கெட்டு இருக்கு..அவர் கோடி கோடியா சம்பாதிக்கிறார்..உங்களுக்கு ஏன் வயித்தெரிச்சல்?.."

ரஜினி என்ன உழைக்கிறாருங்கிரது இருக்கட்டும். பொதுவா ஆரம்பத்துல கஷ்டப் பட்டு தான் எல்லோரும் எந்த தொழிலிலும் முன்னுக்கு வருகிறார்கள். ஆனால் இங்க எந்த உயரதுக்கு அப்படிங்கிறதில தான் பிரச்சினையே இருக்கு. எந்த அளவுக்கு?.. இவ்வளவு தூரம் தெரிந்தே நம்மை சுரண்டுவதையும் நாம் அதை அங்கீகரிக்கிற அளவுக்கும். வேறொண்ணும் வேணாம். பஸ்ஸுல பிக்பாக்கெட்அடிக்கிறவன் திறமைய கூட யோசிச்சு பாருங்க. ந்ல்ல கூட்டமான பஸ்ஸ தேர்ந்தெடுக்கணும். அத்தனை பெரிய கூட்டத்துல யார்கிட்ட பர்சுல கணம் இருக்குன்னு கண்டு பிடிக்கணும் அப்புறம் அத்தனை கூட்டத்திலயும் யாருக்கும் தெரியாம பர்சை உருவனும். கொஞ்சம் எவனுக்கும் தெரிஞ்சாலும் உதார் விட்டு தப்பிக்கணும். ( கொஞ்சம் அசந்தாலும் மக்கள்கிட்ட சிக்கினா சிதறு தேங்காய் தான்..) பின்னாடி கூட்டாளி கிட்ட கை மாத்தி விடணும். அப்புறம ஓடுற பஸ்ஸுல இருந்து இறங்கி எஸ்ஸாகனும். எல்லாம் முடிச்சுட்டு கூட்டாளியோட கூடி பிரச்சினை இல்லாம பங்கு போடணும்.. இப்படி எவ்வளவு திறமை வேண்டி இருக்கு..இப்ப நீங்க பிக் பாக்கெட் அடிக்கிறவன் மேல கோபப் படுவீங்களா.. இல்லை அவனோட திறமைய மெச்சுவீங்களா?.. இல்ல பர்ஸை பறி கொடுத்த ஆளு மேல பாய்வீங்களா? பொதுவா ஒரு வசனம் சொல்லுவாங்க. ஒரு மனுசன் பட்டினியோட இருக்கிறதை விட அவன் பட்டினிக்கு என்ன, யாரு காரணம்னு தெரியாம இருக்கிறது தான் கொடுமைன்னு! அது மாதிரி ஒரு மனுஷன் தன்னை அறியாம தன்னை சுரண்ட அனுமதிக்கிறதுவும் தான் கொடுமை.

" நீங்க என்ன சொன்னாலும் எத்தனை பேரு ரஜினிய பாராட்டுறாங்க.. அவங்கெல்லாம் முட்டாளா? எல்லா மீடியாவும் தான் சிவாஜி பத்தி பேசுறாங்க.."

இது ஒரு பெரிய கூட்டணி. ரஜினிக்கு சிவாஜிய வியாபாரம் செய்ய (விளம்பரப்படுத்த) ஊடகங்கள் எந்த அளவு தேவையோ அந்த அளவுக்கு ஊடகங்களுக்கும் அவங்க வியாபாரத்துக்கும் ரஜினி மாதிரி ஒரு பிம்பம் தேவை. இப்ப "சிவாஜி ரஜினி மொட்டை அசத்தல்" அப்படின்னு குங்குமமோ இல்ல "சிவாஜி-வெளி வராத ரகசியங்கள்" அப்படின்னு ஆனந்த விகடனோ ஒரு செய்தி போட்டா உடனே பத்திரிகை விற்பனை எகிருதில்லை?! அதுக்காகவேணும் போட்டி போட்டு ஒருதருகொருத்தர் பரபரப்பு பண்ணி பில்டப்பு கொடுப்பார்கள். அது போக நம்ம படிச்சதுகள் கூட இலவசமா விளம்பரம் செய்யுதுகள். புதுசா புதுசா சிவாஜி ஸ்டில்ஸ், வீடியோன்னு இலவசமா மெயில்ல சுற்றுக்கு விட்டு...

"பெரிய தலைகளெல்லாம் கூட சிவாஜி படம் பார்த்துட்டு வந்து கருத்து சொல்றதும் அது பேப்பர்ல வர்றதுமா இருக்கே..(கருணா நிதி, ஜெயலலிதா, சந்திர பாபு நாயுடு, அப்புறம் திரையுலகத்துல எல்லோரும்) அவங்களுக்கு கூடவா தெரியாது?.."

நம்ம திரையுலகத்துல தெரியும். அரசியல்ல இருக்கிறத விட மோசமான சொறிஞ்சு விடுற கூட்டம் நிறைய உண்டு. (அதுதான் இன்னும் டி ஆர் மாதிரி ஆளுங்க எல்லாம் கொஞ்சமும் வெட்கம், கூச்சம் இல்லாம கலர் டை அடிச்சுட்டு ஹீரோவா நடிக்கிறார், கூட இருக்கிற யாரும் சொல்றதில்ல யோவ் இது கேவலமா இருக்குன்னு..) அதுனால திரையுலகத்துல இருக்கிறவங்க சொல்றதை விட்டுரலாம். அது ரஜினிக்கு சொறிஞ்சு விடுற வேலை. கருணாநிதியோ, ஜெயலலிதாவோ , சந்திரபாபு நாயுடுவோ படம் பார்த்து கருத்து சொல்லுறது விளம்பரம் கொடுக்கிறது எல்லாம் அவங்க சொந்த நலனுக்காகவும் தான்! யாரு வேணாலும் தான் படம் பார்க்கலாம். நீங்களும், நானும் படம் பாக்கிறோம் அது மாதிரி அவங்களும் மனுசங்க தானே! அவங்களும் பார்க்கட்டும். தப்பில்லை! இங்க வித்தியாசம் என்னன்னா அவங்களுக்கு சிறப்பு காட்சின்னு போட்டு அதை மீடியாவுக்கு சொல்றதும், அப்புறம் நிருபர்கள் எல்லாம் வந்து படம் எப்படின்னு கருத்து கேட்டு அத பேப்பர்ல போடுறதுன்னு நாடகம் எல்லாம் எதுக்கு? ரஜினிக்கும், AVMக்கும் சிவாஜிக்கான விளம்பரம்.. மு.க.வுக்கும் ஜெ.ஜெ.க்கும் ரஜினி கூட எங்க ஆளுன்னு காமிக்கணும்.. ( அதிலயும் சிவாஜி படம் என்னமோ கருப்பு பணத்தை பத்தியாமுல்ல?! மு.க., ஜெ.ஜெ. கிட்ட இல்லாத கருப்பு பணமா. நம்மள பத்தி எதுவும் படத்துல போட்டு கொடுத்துட்டானுங்களோன்னு செக் பண்ண வந்திருப்பாங்களோ!!) அதிலும் நம்ம சந்திர பாபு நாயுடு ஒரு படி மேல போயி ரஜினி மூணாவது அணியில சேரணும்னு ஒரு கோரிக்கை வேற. கெரகம்டா சாமி...

"என்ன தான் இருந்தாலும் ரஜினி படம் பாக்கிறவன் அவனவன் சந்தோசத்துக்காக ஒரு தடவை பிளாக்குல டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டு தான் போகட்டுமே..அதிலென்ன தப்பு?.. இதுக்கு போய் ஏன் இவ்வளவு பிரச்சினை பண்றீங்க?.."

இதுக்கு நம்ம சங்கர் படத்துல இருந்தே ஒரு வசனம் சொல்றேன்..

அஞ்சு பைசா திருடுனா தப்பா?...
இல்லை..
அஞ்சு அஞ்சு பைசாவா அஞ்சு வருசத்துக்கு அஞ்சு கோடி பேருகிட்ட திருடுனா தப்பா?...
ம்ம்ம்ம்ம்..??
( ஆனா இங்க சிவாஜி டிக்கெட் போன விலையெல்லாம் தமிழ் நாட்டுல பல பேரோட அரை மாச சம்பளம்..)

அது சரி எல்லாம் கோளாறு சொல்றீங்களே..படத்தோட கதைய பத்தி ஒண்ணும் சொல்லலையேன்னு கேக்கிறீங்களா.. ஸாரி.. நான் அம்புலி மாமா, காமிக்ஸ் கதையெல்லாம் படிக்கிறதை விட்டு ரொம்ப வருசமாச்சு...

சிவாஜி பில்டப்புக்கு சில உதாரணங்கள்..

* சிவாஜி படத்தை செல் போனில் படம் பிடித்த 3 ரசிகர்கள் கைது - பத்திரிகை செய்தி .. ( செல் போன்ல படம் பிடிசு திருட்டு VCD போட்டு வித்துடுவங்களோ.. )
* ரஜினி மொட்டை கெட்டப்புல வருகிற போட்டோவை அனுமதியில்லாம பிரசுரம் செய்த பதிரிகைகளுக்கு சங்கர் வக்கீல் நோட்டீஸ்.(என்ன கொடுமை சரவணன் இது?...)
* படத்தில் 5 நிமிடம் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டில் ரஜினி வெள்ளைக் காரன் போல் தோன்றுவதற்கு ஒரு பெரிய சாப்ட்வேர் டீம் ஒரு வருசம் வேலை செய்து கொண்டிருந்தார்கள்( இது டூ மச்சு.. த்ரீ மச்சு .. ஃபோர் மச்சு....)
* இப்ப எம்ஜியார், சிவாஜி எல்லாமே ரஜினி தான். அவர் தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் இல்லை.. இப்ப சர்வதேச சூப்பர் ஸ்டார் ஆக முன்னேறியுள்ளார் - கே. பாலசந்தர் ( ஆமாய்யா.. நேத்து தான் ரசியால கூட தஸ்தரோய்க்கி ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பிசிருக்காங்க.. தஸ்தரோய்க்கின்னா ரசிய மொழியில அதிரடி மன்னன்னு அர்த்தமாமுல்ல?)
* சென்னையில முதல் 3 மாசத்துக்கு தியேட்டர் எல்லாம் டிக்கெட் புக்கிங் முடிஞ்சு போச்சு - ண்DTV செய்தி ( தியேட்டருக்கு 4 ஷோன்னு கணக்கு பண்ணாலே சராசரியா ஒரு 50 லட்சம் டிக்கெட் புக் பண்ணியிருக்கணுமேய்யா சென்னையில மட்டும்.. சொல்லுங்க...)
* ரஜினி 25 வருசதுக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அதை விட இளமையா சிவாஜி படத்தில் இருக்கிறார் - ஒரு பேட்டியில் சிவாஜியின் தொழில் நுட்ப கலைஞர்...( அய்யோ போதும்டா சாமி...)


எப்படி இருந்த நான்...




இப்படி ஆகிட்டேன்?......

மேக்-அப் கலைஞருக்கு ஒரு பெரிய "ஓ" போடுங்க...