Wednesday 7 November, 2007

"இன்னாது சுடிதாரா..?"- கிருஷ்ண பகவான் கோபம்..

நேற்று ஒரு செய்தி படித்தேன்..

கேரளாவில் இருக்கிற கிருஷ்ணன் கோவில்ல போன வாரம், பத்மநாப சர்மா தலைமையில 9 ஜோதிடர்கள் கூடி கோவில்ல எல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பாக்குறதுக்கு தேவபிரசன்னம் பார்த்தாங்களாம். கடைசி நாள்ல அதாவது ஞாயிற்றுக்கிழமை நடந்த தேவபிரசன்னத்துல கிருஷணன் கொஞ்ச நாளா ரொம்ப டென்சனாகிப் போயி இருக்காருன்னு தெரிஞ்சதாம். என்னடான்னு கேட்டா கோவிலுக்கு வர்ற பெண்கள் உடுத்துற உடை அவருக்கு பிடிக்கலையாம். வேற ஒண்ணுமில்லை... இது நாள் வரைக்கும் கோவிலுக்கு வர்ற பெண்கள் வேண்டுகோளுக்கிணங்க, சேலை மட்டும்தான் கட்டிகிட்டு வரணும்னு இருந்த விதியைத் தளர்த்தி,சுடிதாரும் கூட போட்டுகிட்டு வரலாம்னு போன ஜூலை மாதம் தான் கோவில் நிர்வாகம் அனுமதிச்சுருக்காங்க.. இந்த சுடிதார் மேட்டர்ல கிருஷ்ணர் டென்ஷனாயிட்டாருன்னு ஜோதிடர்கள் கண்டுபிடிச்சு சொல்லி இந்த மாதிரி வழக்கத்தையெல்லாம் மாத்தி எப்படி உத்தரவு போடலாம்னு நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவிச்சுருக்காங்களாம். அதுனால இப்ப கோவிலுக்குள்ள பெண்களுக்கு சேலை மட்டும்தான் அனுமதின்னு கோவில் நிர்வாகம் திரும்பவும் உத்தரவு போட்டுருக்காங்க..

அடங்கொக்கா மக்கா... நாட்டுல எவ்வளவு பிரச்சினை நடந்துட்டுருக்கு.. அதுல எல்லாம் டென்சனாகாத கிருஷ்ணன் பெண்கள் சுடிதாரப் பார்த்து டென்சனாகி போயிருக்காருன்னா எப்படி?.. இந்த கிருஷ்ணர் வரலாற பார்த்தாலே பிள்ளைக விசயத்துல பண்ணாத பிராடுத்தனம் எல்லாம் பண்ணுன ஆளுன்னு பார்த்திருக்கேன்.சின்ன புள்ளையில வெண்ணைய திருடித் தின்னதெல்லாம் விட்டுருவோம்.. அது ஏதோ சின்னப் புள்ள வயித்துக்கு சாப்பிட்டு போவுது.. வாலிப வயசிலயும் ஆத்துல பொம்பளப் பிள்ளைக குளிக்கப்போனா ஒளிஞ்சிருந்து பார்க்குறதும்.. பிள்ளைக கரையில வச்சுட்டு போன துணியெல்லாம் எடுத்து வச்சுகிட்டு மரத்து மேல உக்காந்துட்டு குளிச்சு முடிச்சு வந்த பிள்ளைக துணியை கேட்டா, கைய நீட்டி "கிருஷ்ணா தா தா"ன்னு கேட்டு துணியில்லாத பிள்ளைகள குதிக்க சொல்லி வேடிக்கையெல்லாம் பார்த்திருக்கானாம்.. கேட்டா எல்லாம் கிருஷ்ணனின் திருவிளையாடலாம்..! மவனே!"ஈவ் டீசிங்"ல புடிச்சு உள்ளே போட வேண்டிய ஆளை எல்லாம் நம்மாளுக பாவம், கடவுளா நினைச்சு கும்பிட்டுகிட்டு இருக்காங்க.. அதுல அவருக்கு பொம்பளைக இப்ப சுடிதார் போட்டா கோபம் வருதாம்.. அதையெல்லாம் ஜோசியர்னு சொல்லிகிட்டு சில பேரு சோழி போட்டு பார்த்து கண்டுபிடிக்கிறாங்களாம்.. அதையும் எல்லோரும் கடைபிடிக்கணுமாம்..(அப்புறம் ஒரு விசயம்.. இந்த தேவபிரசன்னம் பார்த்த கூட்டத்துல நம்ம "கண்டரரு மோகனரரு" எல்லாம் இருந்தாரானு தெரியலை..)

இந்த "தேவ பிரசன்னம்"பார்க்கிற சமாச்சாரம் காலங்காலமா நடந்துட்டு வருது. கேரளாவில 90 சதவீததுக்கு மேல "கல்வியறிவு" பெத்தவங்கலாம்ல..! நம்ம நாட்டுல படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லைன்னு இப்பவாச்சும் விளங்குதா...

Monday 29 October, 2007

தீபாவளி கொண்டாடுவது யார்? யாருக்காக?

இன்று தமிழ் நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளியாகும். நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி,எண்ணெய்,மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச்சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் "தேசியத் திருவிழா" போலக் காட்டப்படுகிறது.
....
தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே ஆகும். நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தஙரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ் பிராமணர்களை விட, தமிழ் நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் "பக்தி சிரத்தை"யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ் நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ் நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல "கங்கா ஸ்நானம்" செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

"நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா?" என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

- முனைவர் தொ.பரமசிவன், "அறியப்படாத தமிழகம்" நூலில்.

Thursday 25 October, 2007

"அபோகலிப்டோ"வும் "சோளகர் தொட்டி"யும் - என்ன சம்பந்தம்?...

"மறுநாள் போலீஸ் அதிகாரி தனது ஜீப்பில் மூன்று போலீஸ்காரர்களுடன் வந்திறங்கினான். அவர்கள் வந்ததும் தடிகளைச் சுழட்டிக் கொண்டு கொட்டடைக்குள் புகுந்து உட்கார்ந்திருந்த எல்லோரையும் சரமாரியாக அடித்தனர். பலருக்கு முதுகில் இரத்தக்கோடு விழுந்தது. சுவர் ஓரமாயிருந்த சிறுவர்களின் தாய் இரண்டு சிறுவர்களையும் படுக்கப்போட்டு அவள் மேலே படுத்து அடிகளைத் தான் வாங்கிக் கொண்டு சிறுவர்களைக் காப்பாற்றினாள்.
.......
மாதியின் முறை வந்தது. அவள் ஏற்கெனவே மிகவும் களைத்தும், மெலிந்தும் இருந்தாள். அடிவயிற்றின் வலியால் வயிற்றைப் பிடித்தவாறு உட்கார்ந்திருந்தாள். மாதி, சித்தி, செல்வி மூவரையும் ஒர்க்சாப்பிற்குள் கூட்டி வரச் சொன்னான் கணேஷ் போலீஸ். அவன் சப்தம் கேட்ட பின்பு, இருவரும் அவளது தோள்களைப் பிடித்துத் தூக்கினார்கள். அப்போது அவளின் சேலையின் கீழ்ப்பகுதி உதிரப் போக்கினால் இரத்தத்தால் நனைந்திருந்தது. ஒர்க்சாப்பிற்குள் அவளைத் தூக்கிச் சென்றபோது பாதி மயக்கத்திலேயே அவள் இருந்தாள்.

மாதியின் சேலையை உருவி அம்மணமாக்கச் சொன்னார்கள். அவளை அம்மணமாக நிறுத்தியபோது, செல்வியை, மாதியின் உறுப்பில் மெக்கர் பெட்டியின் கிளிப்பை மாட்ட உத்தரவிட்டான் அதிகாரி. செல்வி தயங்கினாள்.

"இரத்தப்போக்கு" என்றாள்.

"நீயும் துணியை அவிழ்த்துக் கொள்" என்றதும், அவள் மாதிக்குக் கிளிப்பை மாட்டினாள். மெக்கர் பெட்டியைச் சுற்றி பொத்தானை அழுத்தியதும் சப்தமிட்டு மாதி மயங்கிப் போனாள். அவள் கண்கள் மேலே பார்த்து நெட்டுக் கொண்டது போலிருந்தது. சித்தி, மாதியின் மீது புரண்டு கத்தினாள். இரண்டு போலீசார் பக்கத்தில் வந்து பார்த்தார்கள். அவளின் நெஞ்சைக் கைகளால் அழுத்தித் தட்டினார்கள். பின் அவள் சாகவில்லை, இன்னமும் உயிரோடு இருக்கிறாள் எனத் தெரிந்து கொண்டு சேலையைக் கட்டி அவளை வெளியே கொண்டு போக உத்தரவிட்டான் அதிகாரி."


- "சோளகர் தொட்டி" நூலில் இருந்து.....

அன்பர்களே..

சமீபகமாக மெல் கிப்சன் இயக்கிய "Apokalipto" என்னும் ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. நானும் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன்.

மனித நாகரிகம் வளர்ச்சியடைவதற்கு முன்பு, அமெரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினருக்கிடையே நடக்கிற போராட்டமும்,ஒரு இனம், மற்ற இனத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாய் பலரை அடிமைப்படுத்தி அவர்களை ஏலத்தில் விடுவதும், சிலரை நர பலி கொடுப்பதுமாய் போகின்ற கதையில் ஒருவன் மட்டும் தப்பித்து வருவது தான் கதை.(ஆனால் உண்மையில் அமெரிக்காவில் முன்பு வாழ்ந்த மாயன் நாகரிகத்தைக் குறிக்கிற விதமாகத் தான் படம் அமைந்திருந்தது என்பதும் அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியினரை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி கைப்பற்றியதை நியாயப் படுத்தும் போக்கில் இயக்குனர் கையாண்டுள்ளார் என்பதும் (இறுதி காட்சியில்) பெரும் விமர்சனத்திற்குள்ளானதும் வேறு விசயம்.)
உங்களில் சிலரும் அதை பார்த்திருக்கக்கூடும்.பார்க்கிற அனைவருக்குமே இவ்வளவு கொடூரங்கள் எல்லாம் மனித வரலாற்றில் நடந்திருக்குமா என்று அச்சத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் மற்றொரு கேள்வியும் நமக்குள் எழுகிறது..
நாம் உண்மையிலேயே நாகரிகம் அடைந்து விட்டோமோ?...
இப்படம் பார்க்கிற அதே வேளையில் எனக்கு தவிர்க்க இயலாமல் சில காலம் முன்பு படித்த புத்தகம் ஒன்று நினைவுக்கு வந்தது.சமூகத்தில் "நாகரிகத்தில் முன்னேறிய(?)பிரிவினர்" அவர்களை விட நாகரிகத்தில் "பின் தங்கியிருக்கிற" பிரிவினரின் மீது செலுத்திய கணக்கிலடங்கா வன்முறைப் பிரயோகத்தின் ரத்த சாட்சியமாய் விளங்கும்,உண்மை சம்பவங்களின் தொகுப்பாக எழுதப் பட்ட "சோளகர் தொட்டி" என்ற கதை தான் அது. வீரப்பன் என்ற ஒரு கொள்ளையனைத் தேடுகிறோம் என்ற பெயரில் ஒரு கொள்ளைக் கூட்டமே வனப்பகுதிக்குள் புகுந்து அங்கு வாழ்ந்த வனவாசிகளைக் கொலை செய்தும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததுமாய் நடத்திய கொடூரங்களைப் படிக்கிற யாருக்கும் நாம் நாகரிகத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என்ற கேள்வி எழ வேண்டும்.
இதோ.. வீரப்பனை கொன்றாகிவிட்டது.. அந்த வேட்டையில் "சாகசம்" புரிந்த எல்லா "வீராதி வீரன்,சூராதி சூரன்"களுக்கும் நிலம், பரிசு என்று 50,60 கோடி அள்ளி சூறை விட்டாகி விட்டது.. அங்கு அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்களுக்கு எந்த நாய்க்கும் தண்டனை என்ன...அதிகாரப்பூர்வ விசாரணை கூட கிடையாது..
இதோ இன்றைக்கும் பீகாரில், சங்கிலியை திருடிய திருடனை அடித்து உதைத்து மோட்டார் சைக்கிளில் சேர்த்துக் கட்டி தர தரவென்று இழுத்துப் போகிறது ஒரு இழிபிறவி.. ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது..சிலது ஆரவாரமும் செய்கிறது...

ஏனென்றால் நாமெல்லாம் நாகரிகத்தில் முன்னேறியவர்கள்!! இல்லையா...?

சோளகர் தொட்டியை இது வரை படிக்காத,படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காக அந்த நூல் மின்னூல் வடிவில் இறக்குமதி செய்ய...
http://www.esnips.com/doc/07f3ae05-be53-4140-8113-4c439e90bd18/SolagarThotti

அனைவரின் கவனத்திற்கும்: இது அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல். புத்தகத்தை வாங்க வாய்ப்புள்ளவர்கள் நேரடியாக வாங்கிப் படிப்பதே நன்று.