Monday 29 October, 2007

தீபாவளி கொண்டாடுவது யார்? யாருக்காக?

இன்று தமிழ் நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளியாகும். நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி,எண்ணெய்,மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச்சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் "தேசியத் திருவிழா" போலக் காட்டப்படுகிறது.
....
தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளி) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருக்கார்த்திகைத் திருவிழாவே ஆகும். நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தஙரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ் பிராமணர்களை விட, தமிழ் நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் "பக்தி சிரத்தை"யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ் நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ் நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல "கங்கா ஸ்நானம்" செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

"நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா?" என்று பாரதிதாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

- முனைவர் தொ.பரமசிவன், "அறியப்படாத தமிழகம்" நூலில்.

2 comments:

ஏகலைவன் said...

வணக்கம் தோழரே!,

இப்பதிவிற்கு சற்றும் சம்பந்தமில்லாத மறுமொழியாக இது இருக்கலாம், ஆனால் இது நமக்கு வெகுவாக சம்பந்தப்பட்டதாகவும் இருப்பதனால் இதனை இப்பதிவில் வைக்கிறேன். நீங்கள் இதனை பதிப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை.

முன்டாசுக்கவிஞன் என்று உணர்ச்சிப் பெருக்குடன் நம் முன் உருவகப்படுத்தப்பட்ட பாரதியை, அவனது அந்த முன்டாசுக்குள் மூடிவைக்கப்பட்டிருந்த பார்ப்பனக் குடுமியையும், தேசிய விடுதலை பாடல்கள் என்ற போர்வைக்குள் அவன் மறைத்துவைத்திருந்த‌ ஆரிய விடுதலைப் புராணங்களையும் அனைவருக்கும் திறந்துகாட்டியவர் வே.மதிமாறன். இது நடைபெற்று சுமார் 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதற்கு இதுவரை சரியான விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படாத மந்தமான சூழ்நிலையே இருக்கிறது.

ஆனாலும், இன்னும் பாரதியின் துதிபாடல்கள் நின்றபாடில்லை. அது ஏதோ பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலால் நிகழ்த்தப்படுகிறது தொலைந்து போகட்டும் என்று விட்டுவிடவும் முடியவில்லை. ஏனென்றால் அதை நிகழ்ததிக்கொண்டிருப்பது முற்போக்குக் கூடாரம். இரட்டை வேடமே தனது கொள்கையாக வடித்து வைத்துக்கொண்டு போலிக் கம்யூனிசம் பேசித்திரியும் சி.பி.ஐ/எம் கட்சிகளும் அதன் வெகுஜன அமைப்புகளான த.மு.எ.ச. போன்ற அமைப்புகளும் இதனை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கின்றன.

மதிமாறனுடைய ''பாரதி'ய ஜனதா பார்ட்டி'' நூலைப்பற்றிய மதிப்பீடுகளைச் செய்யாமலேயே, அந்நூலுக்கான கண்டனக் கூட்டங்களையும் நடத்தி தன்னுடைய பார்ப்பன சேவகத்தை செவ்வனே செய்துமுடித்தன த.மு.எ.ச.வின் பெருந்தலைகள்.

இப்போதும் கூட ஒரு நூல் வெளியீட்டுவிழாவில் த.மு.எ.ச.வின் ஆதவன் தீட்சன்யாவிடம் இதுகுறித்தான ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. "பாரதி குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?" என்பதுதான் அந்த கேள்வி. கீற்று என்ற இணையதள நிர்வாகி மிணர்வா என்பவர் இந்தக் கேள்வியை சில நூறுபேர் குழுமியிருந்த அந்தச் சபையில் வைத்தார்.

அதற்கு அவர் அளித்த பதிலின் சாரம் இதுதான் "நாங்கள் பாரதிதாசனை விமர்சித்து கட்டுரையொன்றை எமது 'புதுவிசை'யில் வெளியிட்டுவிட்டோம்" என்பது அவருடைய பதில். (இன்னும் நான் முழுமையாக வாசிக்கவில்லை, பிறகு சொல்கிறேன் என்றெல்லாம் நிறைய சப்பைக்கட்டுகளும் அவரது பதிலில் இடம்பிடித்திருந்தன) பாரதியைப்பற்றிக் கேட்டால் பாரதிதாசனைக்காட்டுவதுதான் இவர்களது முற்போக்கா?

மாபெரும் தலித் எழுத்தாளர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் இந்த முற்போக்கு வேடதாரி, பாரதியை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா, என்று கூட சொல்லமுடியாத இரட்டைநிலையில் இருந்து கொண்டு சாதியத்திற்கு எதிராக எதைக் கிழித்துவிடமுடியும்? என்பதுதான் நமது கேள்வி.

சரி அவரது 'புதுவிசை'யில் இதுகுறித்து எழுதப்பட்டுள்ளதுதான் என்ன? இந்த விவாதம் மீண்டுமொருமுறை தொடங்கப் பட்டுள்ளது என்னுடைய வலைதளத்தில். தாங்களும் இதில் கலந்து கொண்டு விவாதிக்க அழைக்கிறேன்.

நன்றி!
தோழமையுடன்,
ஏகலைவன்.

Unknown said...

செவ்வணக்கம் தோழர் பால்வெளி

எல்லா திருவிழாவிலும் இது போன்ற ஒரு உண்மை உறைந்து கிடக்கிறது, அவை எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வாருங்கள்.
உங்களை கேட்காமலேயே உங்கள் பதிவை என்னுடைய வலைப்பூவில் வெட்டி ஒட்டிவிட்டேன். தவறெனில் நீக்கிவிடுகிறேன்.



இங்கும் வந்து உங்கள் கருத்துகளை பதியுங்கள் senkodi.multiply.com


தோழமையுடன்

செங்கொடி