Thursday, 12 July 2007

சாமீ.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி...

சமீப காலமாக, சென்னையில் தெற்கு பக்கமாக அப்படியே தரமணி தாண்டி மத்திய கைலாஷ்... துரைப்பாக்கம்...எல்லாம் போய் கேளம்பாக்கம் போகும் பழைய மகாபலிபுரம் போகிற வழியெங்கும் பார்த்திருப்பீங்க..சாலைப் பணிகள் எல்லாம் படு வேகமாக நடந்து வருவதை..இந்த சாலையெங்கும் நிறைய மென்பொருள் (அட.. அதுதாங்க.. சாஃப்ட்வேர்) நிறுவனங்கள் வருகின்றனவாம். அதனால் அரசு தொலைநோக்கு பார்வையோடு அதற்கான உள்கட்டுமான வசதி (அடச்சே.. இன்ஃப்ராஸ்ட்ரச்சருங்க..)எல்லாம் இப்பவே பண்ணிகிட்டுருக்காங்களாம்.. இந்த நிறுவனங்கள் ஆரம்பிச்ச பின்னாடி நம்ம நாட்டுக்கு ஏகப்பட்ட அந்நிய செலாவணி வருமாம்... இந்த சாலைக்கு பேரு "தகவல் தொழில்நுட்ப நெடுஞ்சாலை"(அதாவது ஐ டி காரிடாராம்).

நம்ம முதல்வர் அடிக்கடி அறிக்கை விடுவாரு.."ஐ டி காரிடார்" வேலை எல்லாம் துரித கதியில் நடந்து வருகிறது.. 2007க்குள் முடித்து விடுவோம்.. 2008க்குள் முடித்து விடுவோம்னு.. நம்ம முன்னாள் ஐ டி தயாநிதி கூட இடைஇடையில அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாரு.. இந்த பணிகளை எல்லாம் சீக்கிரம் முடிக்க சொல்லியிருக்கேன்னு..

நினைக்கவே ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க.. இப்போது தான் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் அல்லது இன்னமும் ஆரம்பிக்காத நிறுவனங்களுக்காக, அந்நிறுவனங்களில் பணிபுரியப் போகிற நம் சகோதர,சகோதரிகளுக்காக இப்போதே நம் அரசு திட்டமிட்டு பணியாற்றுவது சந்தோஷம் தானே... அதுவும் இந்த சாலையெங்கும் அப்படியே அங்கங்கே நீரூற்றாம்.. அப்புறம் இரண்டு பக்கமும் மரங்களாம்.. அங்கங்கே சிறபங்கள் எல்லாம் வேற வைக்கப்போறாங்களாம்..(மத்திய கைலாஷ் பக்கமா போய் பாருங்க.. சாலைக்கு இரண்டு பக்கமும் சுவரெல்லாம் ஓவியங்கள் வேற..) நம்ம ஆளுங்க ஏ சி காருல போனாலும் போற பாதையெல்லாம் கண்ணுக்கும் குளிர்ச்சி.. மனசுக்கும் மகிழ்ச்சியா இருக்கணும்ல.. ஆக கிட்டதட்ட நம்ம சென்னைய கூட ஒரு ஃபாரின் ரேஞ்சுக்கு கொண்டு வரப் போறாங்களாம்.. கேக்கவே எனக்கு புல்லரிக்குது.. நம்ம அரசாங்கம் இப்பல்லாம் ரொம்பவே தொலைநோக்கு பார்வையோட தான் திட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க.. உண்மையிலேயே பெருமையாக இருக்குதுல்ல...?

கொஞ்சம் பொறுங்க...
அப்படியே இதே சென்னையில அந்த பக்கமா.. அதாவது வட சென்னை பக்கமா போய் பார்ப்போமா?...

அங்க இந்த அம்பத்தூர்,பாடின்னெல்லாம் சில பகுதிகள் இருக்குங்க.. அங்கயும் இந்த மாதிரி நிறைய நிறுவனங்கள் இருக்குது.. அங்க தென்சென்னையில இப்ப நம்ம பார்த்த பகுதிகள்ல வரப் போற நிறுவனங்கள விட அதிகமான நிறுவனங்களும், தொழிற்சாலையெல்லாம் ஏற்கனவே பத்து, பதினஞ்சு வருசமா இருக்குதுங்க.. என்ன, அங்கெல்லாம் இப்ப பார்த்த மென்பொருள் மாதிரி தொழில் எல்லாம் ரொம்ப இல்லீங்க.. ஆனா அங்கேயும் பத்தாயிரம,லட்சக் கணக்கான ஆளுங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க... பஸ்ஸூலயும், வண்டியிலும், சைக்கிள்லயுமா தினம் வந்து போய் கிட்டு தான் இருக்காங்க முன்னாடியே.... ஆனா அங்கே இருக்கிற சாலையெல்லாம் பாத்தா என்னமோ அடிக்கு இரண்டு பள்ளம்னு நம்ம அரசாங்கமே கணக்கு போட்டு பண்ணின மாதிரி ஒரே குண்டும் குழியுமா தான் இருக்கு. அதிலயும் மழை பேஞ்ச நேரத்துல எல்லாம் போனா, ஏதோ இப்பதான் நாத்து நட்டு வச்சிருக்கிற வயக்காட்டு பக்கமா வந்துட்டோமோன்னு தான் தோணுது... கல்யாணம் ஆகாத பிள்ளைக்கு கூட பிரசவ வலி எடுத்துடும் போல.. அந்த லட்சணத்துல தான் எல்லா சாலையுமே இருக்கு..ரொம்ப வருசமாவே இப்படித்தான் இருக்குதாம்.. இங்கல்லாம் அங்கங்கே நீரூற்றும் வேணாம்..சைடுல மரம் கூட வேணாம்.. முழுசா ஒரு ரோடு போடறத பத்திக்கூட பேச யாருமில்லையே..

நமக்கு இந்த அந்நிய செலாவணி, உள்ளூர் செலாவணிங்கிற மாதிரி களவாணித்தனம் எல்லாம் தெரியாதுங்க.. அம்மா கட்சி கூட்டத்துலல்லாம் நம்ம எம்ஜியார் கேசட்டு போடுவாங்க.. கேட்டிருக்கேன்.. "மக்களுக்காக, மக்களால் தேர்ந்து எடுக்கப்படுவது தான் அரசு.. அந்த அரசு நடத்துகிற ஆட்சி தான் மக்களாட்சி"ன்னுவாரு..இந்த மக்கள், மக்கள்னு சொல்றாங்களே.. இவங்க எந்த மக்கள சொல்றாங்க.. எல்லா மக்களும் நம்ம அரசாங்கத்துக்கு ஒண்ணு தானா?.. அதே மாதிரி எல்லா நிறுவனங்களும் நம்ம அரசாங்கத்துக்கு ஒண்ணு தானா?..

விவரமான ஆளுங்க யாராவது சொல்லுங்க சாமி..

1 comment:

நாமக்கல் சிபி said...

//நமக்கு இந்த அந்நிய செலாவணி, உள்ளூர் செலாவணிங்கிற மாதிரி களவாணித்தனம் எல்லாம் தெரியாதுங்க.. அம்மா கட்சி கூட்டத்துலல்லாம் நம்ம எம்ஜியார் கேசட்டு போடுவாங்க.. கேட்டிருக்கேன்.. "மக்களுக்காக, மக்களால் தேர்ந்து எடுக்கப்படுவது தான் அரசு.. அந்த அரசு நடத்துகிற ஆட்சி தான் மக்களாட்சி"ன்னுவாரு..இந்த மக்கள், மக்கள்னு சொல்றாங்களே.. இவங்க எந்த மக்கள சொல்றாங்க.. எல்லா மக்களும் நம்ம அரசாங்கத்துக்கு ஒண்ணு தானா?.. அதே மாதிரி எல்லா நிறுவனங்களும் நம்ம அரசாங்கத்துக்கு ஒண்ணு தானா?..
//

:)))