Thursday, 25 October 2007

"அபோகலிப்டோ"வும் "சோளகர் தொட்டி"யும் - என்ன சம்பந்தம்?...

"மறுநாள் போலீஸ் அதிகாரி தனது ஜீப்பில் மூன்று போலீஸ்காரர்களுடன் வந்திறங்கினான். அவர்கள் வந்ததும் தடிகளைச் சுழட்டிக் கொண்டு கொட்டடைக்குள் புகுந்து உட்கார்ந்திருந்த எல்லோரையும் சரமாரியாக அடித்தனர். பலருக்கு முதுகில் இரத்தக்கோடு விழுந்தது. சுவர் ஓரமாயிருந்த சிறுவர்களின் தாய் இரண்டு சிறுவர்களையும் படுக்கப்போட்டு அவள் மேலே படுத்து அடிகளைத் தான் வாங்கிக் கொண்டு சிறுவர்களைக் காப்பாற்றினாள்.
.......
மாதியின் முறை வந்தது. அவள் ஏற்கெனவே மிகவும் களைத்தும், மெலிந்தும் இருந்தாள். அடிவயிற்றின் வலியால் வயிற்றைப் பிடித்தவாறு உட்கார்ந்திருந்தாள். மாதி, சித்தி, செல்வி மூவரையும் ஒர்க்சாப்பிற்குள் கூட்டி வரச் சொன்னான் கணேஷ் போலீஸ். அவன் சப்தம் கேட்ட பின்பு, இருவரும் அவளது தோள்களைப் பிடித்துத் தூக்கினார்கள். அப்போது அவளின் சேலையின் கீழ்ப்பகுதி உதிரப் போக்கினால் இரத்தத்தால் நனைந்திருந்தது. ஒர்க்சாப்பிற்குள் அவளைத் தூக்கிச் சென்றபோது பாதி மயக்கத்திலேயே அவள் இருந்தாள்.

மாதியின் சேலையை உருவி அம்மணமாக்கச் சொன்னார்கள். அவளை அம்மணமாக நிறுத்தியபோது, செல்வியை, மாதியின் உறுப்பில் மெக்கர் பெட்டியின் கிளிப்பை மாட்ட உத்தரவிட்டான் அதிகாரி. செல்வி தயங்கினாள்.

"இரத்தப்போக்கு" என்றாள்.

"நீயும் துணியை அவிழ்த்துக் கொள்" என்றதும், அவள் மாதிக்குக் கிளிப்பை மாட்டினாள். மெக்கர் பெட்டியைச் சுற்றி பொத்தானை அழுத்தியதும் சப்தமிட்டு மாதி மயங்கிப் போனாள். அவள் கண்கள் மேலே பார்த்து நெட்டுக் கொண்டது போலிருந்தது. சித்தி, மாதியின் மீது புரண்டு கத்தினாள். இரண்டு போலீசார் பக்கத்தில் வந்து பார்த்தார்கள். அவளின் நெஞ்சைக் கைகளால் அழுத்தித் தட்டினார்கள். பின் அவள் சாகவில்லை, இன்னமும் உயிரோடு இருக்கிறாள் எனத் தெரிந்து கொண்டு சேலையைக் கட்டி அவளை வெளியே கொண்டு போக உத்தரவிட்டான் அதிகாரி."


- "சோளகர் தொட்டி" நூலில் இருந்து.....

அன்பர்களே..

சமீபகமாக மெல் கிப்சன் இயக்கிய "Apokalipto" என்னும் ஒரு திரைப்படம் வெளிவந்திருக்கிறது. நானும் சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன்.

மனித நாகரிகம் வளர்ச்சியடைவதற்கு முன்பு, அமெரிக்காவில் வாழ்ந்த பழங்குடியினருக்கிடையே நடக்கிற போராட்டமும்,ஒரு இனம், மற்ற இனத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களுமாய் பலரை அடிமைப்படுத்தி அவர்களை ஏலத்தில் விடுவதும், சிலரை நர பலி கொடுப்பதுமாய் போகின்ற கதையில் ஒருவன் மட்டும் தப்பித்து வருவது தான் கதை.(ஆனால் உண்மையில் அமெரிக்காவில் முன்பு வாழ்ந்த மாயன் நாகரிகத்தைக் குறிக்கிற விதமாகத் தான் படம் அமைந்திருந்தது என்பதும் அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியினரை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி கைப்பற்றியதை நியாயப் படுத்தும் போக்கில் இயக்குனர் கையாண்டுள்ளார் என்பதும் (இறுதி காட்சியில்) பெரும் விமர்சனத்திற்குள்ளானதும் வேறு விசயம்.)
உங்களில் சிலரும் அதை பார்த்திருக்கக்கூடும்.பார்க்கிற அனைவருக்குமே இவ்வளவு கொடூரங்கள் எல்லாம் மனித வரலாற்றில் நடந்திருக்குமா என்று அச்சத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் மற்றொரு கேள்வியும் நமக்குள் எழுகிறது..
நாம் உண்மையிலேயே நாகரிகம் அடைந்து விட்டோமோ?...
இப்படம் பார்க்கிற அதே வேளையில் எனக்கு தவிர்க்க இயலாமல் சில காலம் முன்பு படித்த புத்தகம் ஒன்று நினைவுக்கு வந்தது.சமூகத்தில் "நாகரிகத்தில் முன்னேறிய(?)பிரிவினர்" அவர்களை விட நாகரிகத்தில் "பின் தங்கியிருக்கிற" பிரிவினரின் மீது செலுத்திய கணக்கிலடங்கா வன்முறைப் பிரயோகத்தின் ரத்த சாட்சியமாய் விளங்கும்,உண்மை சம்பவங்களின் தொகுப்பாக எழுதப் பட்ட "சோளகர் தொட்டி" என்ற கதை தான் அது. வீரப்பன் என்ற ஒரு கொள்ளையனைத் தேடுகிறோம் என்ற பெயரில் ஒரு கொள்ளைக் கூட்டமே வனப்பகுதிக்குள் புகுந்து அங்கு வாழ்ந்த வனவாசிகளைக் கொலை செய்தும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததுமாய் நடத்திய கொடூரங்களைப் படிக்கிற யாருக்கும் நாம் நாகரிகத்தில் எந்த நிலையில் இருக்கிறோம் என்ற கேள்வி எழ வேண்டும்.
இதோ.. வீரப்பனை கொன்றாகிவிட்டது.. அந்த வேட்டையில் "சாகசம்" புரிந்த எல்லா "வீராதி வீரன்,சூராதி சூரன்"களுக்கும் நிலம், பரிசு என்று 50,60 கோடி அள்ளி சூறை விட்டாகி விட்டது.. அங்கு அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்களுக்கு எந்த நாய்க்கும் தண்டனை என்ன...அதிகாரப்பூர்வ விசாரணை கூட கிடையாது..
இதோ இன்றைக்கும் பீகாரில், சங்கிலியை திருடிய திருடனை அடித்து உதைத்து மோட்டார் சைக்கிளில் சேர்த்துக் கட்டி தர தரவென்று இழுத்துப் போகிறது ஒரு இழிபிறவி.. ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது..சிலது ஆரவாரமும் செய்கிறது...

ஏனென்றால் நாமெல்லாம் நாகரிகத்தில் முன்னேறியவர்கள்!! இல்லையா...?

சோளகர் தொட்டியை இது வரை படிக்காத,படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காக அந்த நூல் மின்னூல் வடிவில் இறக்குமதி செய்ய...
http://www.esnips.com/doc/07f3ae05-be53-4140-8113-4c439e90bd18/SolagarThotti

அனைவரின் கவனத்திற்கும்: இது அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல். புத்தகத்தை வாங்க வாய்ப்புள்ளவர்கள் நேரடியாக வாங்கிப் படிப்பதே நன்று.

6 comments:

கோவி.கண்ணன் said...

பால்வெளி,

மிக்க நன்றி. இந்த நூலை படித்திருக்கிறேன். பலர் கண்ணீர்சிந்தியிருக்கும், உதிரம் சிந்தியிருக்கும் காவியம் அது.

Anonymous said...

சோளகர் தொட்டி ஏற்கனவே கேள்விப்பட்ட புத்தகம்தான்.

மீண்டும் நினைவுபடுத்தி விட்டீர்கள். இந்த புத்தகம் எங்கே கிடைக்கு என்று தெரியுங்களா???? (சென்னையில்)

நானும் வீரப்பன் ஏரியாதாங்க. கொளத்துர். அதனாலேயே இதில் பல விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆவல்.

மின் நூலுக்கு நன்றி. ஆனால் நேரடியாக படிக்கவே விரும்புகிறேன்.

பால்வெளி said...

பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.. சென்னையில் பொதுவான முற்போக்கு நூல்கள் விற்கும் எல்லா கடைகளிலும் கிடைக்கும். "கீழைகாற்று", "பாரதி" என்று பல கடைகளிலும் கிடைக்கும்..

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367
இங்கு விசாரிக்கலாம்.

சென்னை வாசிகள் யாராவது தகவல் தாருங்களேன்..

நன்றியுடன்,
பால்வெளி.

Anonymous said...

அறியப்படத மலைவாழ் ம்க்களின் வேதனையையும், அரச பயங்கரவாத கோரமுகத்தையும் நெஞ்சில் அறையும் பதிவு - சோளகர் தொட்டி.

//இந்த புத்தகம் எங்கே கிடைக்கு என்று தெரியுங்களா???? //

அண்ணாசாலை 'ஹிங்கின்ஸ் பாதம்ஸ்'ல் கிடைக்கலாம். அங்குதான் நான் வாங்கினேன்.

நன்றி,
அன்சாரி.

அசுரன் said...

//சோளகர் தொட்டியை இது வரை படிக்காத,படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்காக அந்த நூல் மின்னூல் வடிவில் இறக்குமதி செய்ய...
http://www.esnips.com/doc/07f3ae05-be53-4140-8113-4c439e90bd18/SolagarThotti

அனைவரின் கவனத்திற்கும்: இது அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல். புத்தகத்தை வாங்க வாய்ப்புள்ளவர்கள் நேரடியாக வாங்கிப் படிப்பதே நன்று.///

Yes it is a must. It is the document of Atrocity by Police on people.

Asuran

Ayyanar Viswanath said...

மின் நூல் வடிவம் தந்ததிற்கு மிகவும் நன்றி..